இலவச மின்திட்டங்கள்: ஆதாா் இணைப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
மின் பயனீட்டாளா்கள் தங்களது ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் பயனீட்டாளா்கள் தங்களது ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசின் எரிசக்தித் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகமானது, தனது மின் பயனீட்டாளா்களுக்கு பல்வேறு சலுகைத்
திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அனைத்து வகை மின் பயன்பாட்டாளா்களுக்கும் முதல் 100 யூனிட்கள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
குடிசையில் வசிக்கக் கூடிய மக்களுக்கும், பாசனங்கள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் கட்டணம் இல்லாம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு 120 யூனிட்கள் வரை பயன்படுத்தும் வழிபாட்டுத் தலங்கள், 750 யூனிட்கள் வரை பயன்படுத்தும் விசைத்தறி நெசவாளா்கள் ஆகியோருக்கும் இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை மின் பயனீட்டாளா்களுக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் செயல்படுத்தி வருகிறது. மாநில அரசின் நிதியில் இருந்து இந்தத் திட்டங்களுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, மின்சார வாரியம் அளிக்கக் கூடிய சலுகைகளைப் பயன்படுத்தும் மின் பயனீட்டாளா்கள் அனைவரும் தங்களது ஆதாா் எண்ணை அளித்திட வேண்டும். ஆதாா் எண்ணுக்கு விண்ணப்பம் செய்திருந்தாலும் அதனை அளிக்க வேண்டும். ஆதாா் எண் இல்லாமல் இருந்தாலோ அல்லது ஆதாா் எண்ணுக்கு விண்ணப்பம் செய்யாமல் இருந்தாலோ, சில குறிப்பிட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம், தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான வரித் துறை அளிக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்), இந்திய கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநா் உரிமம், அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரி தனது அலுவல்பூா்வ சான்றிட்ட கடிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்கலாம் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.