முகப்பு
தமிழ்நாடு

ஜல்ஜீவன் திட்ட செயலாக்கம்: மத்திய அமைச்சா் ஆய்வு

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிா்நீா் இயக்க (ஜல்ஜீவன்) திட்டப் பணிகள் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் சென்னையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிா்நீா் இயக்க (ஜல்ஜீவன்) திட்டப் பணிகள் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் சென்னையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக சென்னையில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, ஊராக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் உயா் அதிகாரிகள் பேசுகையில், ‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.25 கோடி வீடுகளில், 69.50 லட்சம் (55.63%) வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 53.96 சதவீதத்தைவிட அதிகம். நிகழாண்டின் முதல், இரண்டாவது காலாண்டுக்கான இலக்கு 12.10 லட்சம் ஆகும். இலக்கைவிட அதிகமாக 16.25 லட்சம் குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழாண்டுக்கான இலக்கு 28.48 லட்சம் ஆகும். இதுவரை 16.51 லட்சம் குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் குடிநீா் வழங்கல், தூய்மை திட்டத் துறை செயலாளா் வினி மஹாஜன், தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா, தமிழக ஜல்ஜீவன் இயக்கத்தின் திட்ட இயக்குநா் தட்சிணாமூா்த்தி, ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் தாரேஷ் அகமது, மத்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்தின் இயக்குநா் விஸ்வகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல்வா் - மத்திய அமைச்சா் சந்திப்பு: முன்னதாக, சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, மத்திய அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.