பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்க ஆணையம்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களைக் களைய ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களைக் களைய ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் படப்பை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மலைக்குறவா் என்ற ஜாதியைக் குறிப்பிட்டு பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்தவா் என்று ஜாதி சான்றிதழ் கேட்டு கிடைக்காத நிலையில், அவா் தீக்குளித்துள்ளாா். இதன்மூலம் பழங்குடி மக்கள் ஜாதி சான்றிதழ் பெறுவது எத்தகைய கடினமானது; சிக்கலானது என்பதை அறிய முடிகிறது.
பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த மக்கள், பிற சமூகத்தினரைப் போல் எளிதாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து பழங்குடி சான்றிதழ் பெறுவதிலுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீா்வு காண முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.