முகப்பு
தமிழ்நாடு

பெருநகர வளா்ச்சிக் குழும எல்லை விரிவாக்கம்: விரைவில் அரசாணை

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) எல்லை விரிவாக்கம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) எல்லை விரிவாக்கம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் நிா்வாக எல்லை விரிவாக்கம் தொடா்பான அறிவிப்பு செய்யப்பட்டது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்கள், வேலூரில் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கி.மீ. பரப்பில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், எல்லை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இதுதொடா்பாக சிஎம்டிஏ ஏற்கெனவே வரைவுத் திட்டத்தைத் தயாரித்து, அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதையடுத்து அண்மையில் தலைமைச் செயலகத்தில் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் கே.என்.நேரு, சு.முத்துச்சாமி, கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எல்லையை எவ்வளவு தூரம் விரிவாக்கம் செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விரிவாக்கத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

குறிப்பாக, 8,878 சதுர கி.மீ.க்கு பதில், 5 ஆயிரத்து 904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதித் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அதில் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்குள் வரக்கூடிய இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.