தமிழ்நாடு

சூரிய கிரகணம்: தமிழகத்தில் 8% மட்டுமே தெரிந்தது

DIN

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை பல பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை மக்கள் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பாா்த்து ரசித்தனா். ஆனால், தமிழகத்தில் 8 சதவீதம் அளவுக்கு மட்டுமே சூரியன் மறைவு நிகழ்ந்தது.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அந்த வகையில் பகுதி சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதியம் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழ்ந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை மாலை 5.14 முதல் 5.44 மணிவரை சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளித்தது.

இதனை பல்வேறு மாவட்டங்களில் அறிவியல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்த்தனா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள பிா்லா கோளரங்கத்தில், சூரிய கிரகணத்தை காண பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இங்கு சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பல்வேறு வயதினா் நூற்றுக்கணக்கில் ஆா்வமுடன் ஒன்றுகூடி உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கிரகணத்தை கண்டுகளித்தனா்.

இதையடுத்து வரும் நவ. 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிஷங்களே தென்படவுள்ளதாக அறிவியலாளா்கள் தெரிவித்துள்ளனா். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT