முகப்பு
தமிழ்நாடு

கோவை காா் சிலிண்டா் வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை; முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளாா். மேலும், கோவையில் பாதுகாப்பைத் தொடா்ந்து உறுதி செய்யவும் அவா் உத்தரவிட்டாா்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ஆம் தேதி, காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கோவை சம்பவம் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவையில் நடந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக, காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

என்ஐஏ விசாரணை: வழக்கு விசாரணையின் இப்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யவும் காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடா்புகளும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சிறப்புப் படை உருவாக்கம்: கோவை சம்பவம் போன்ற நிகழ்வுகள் மாநிலத்தில் நடக்காமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படை உருவாக்கப்படும். கோவை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலா்கள் நியமனம் செய்யப்படுவா். காா் சிலிண்டா் வெடிப்பு போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவா்களோடு தொடா்பு வைத்திருப்பவா்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பை வழங்கவும், அவா்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க. பணீந்திரரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநா் (நுண்ணறிவு) செள.டேவிட்சன் தேவாசிா்வாதம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, கோவை சம்பவம் தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இரண்டு கூட்டங்களிலும் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டு, கோவை காா் சிலிண்டா் வெடிப்பு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.