புகுந்தவீட்டின் பூட்டை உடைத்து குடியேறிய இளம்பெண். 
தமிழ்நாடு

புகுந்தவீட்டின் பூட்டை உடைத்து குடியேறிய இளம்பெண்!

வரதட்சணை கேட்டு துன்புறுத்தி புகுந்தவீட்டைவிட்டு வெளியேற்றியதால், 20 நாள்களாக திண்ணையில் வசித்து வந்த இளம்பெண், கிராமமக்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் குடியேறினார்.

DIN

மயிலாடுதுறை: வரதட்சணை கேட்டு துன்புறுத்தி புகுந்தவீட்டைவிட்டு வெளியேற்றியதால், 20 நாள்களாக திண்ணையில் வசித்து வந்த இளம்பெண், வியாழக்கிழமை இரவு கிராமமக்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டை கடப்பாறையால் நெம்பி உடைத்து வீட்டில் குடியேறினார்.

திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் பிரவீனா. இவரை மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்குவெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன் என்பவருக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 பவுன் தங்க நகை, என்பீல்டு இருசக்கர வாகனம், ரூ.3 லட்சம் சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இருவரும் 3 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், கூடுதலாக வரதட்சனை கேட்டதாகக் கூறப்படுகிறது. 

நடராஜன்-பிரவீனா

இந்நிலையில், பிரவீனாவை வீட்டில் விட்டுவிட்டு நடராஜன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், நடராஜனின் தம்பி சதீஷ் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரவீனா கணவரிடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதனை நம்பாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்டுகொண்டு நடராஜன் அதன்பின்னர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. 

இதையடுத்து, கணவர் வீட்டார் பிரவீனாவை வீட்டைவிட்டு வெளியேற்றினர். தன் கணவரை கண்டுபிடித்து தன்னோடு சேர்த்து வைக்கக்கோரி பிரவீனா கணவர் வீட்டுத் திண்ணையில் 20 நாள்களாக வசித்து வந்தார். 

இதுகுறித்து, ஊர் பஞ்சாயத்தார் பேசியும் நடராஜன் குடும்பத்தினர் மதிக்காததால், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் பொதுமக்களுடன் வந்து பிரவீனா புகார் மனு அளித்தார். 

புகுந்தவீட்டின் பூட்டை உடைத்து குடியேறிய இளம்பெண் பிரவீனா.

வீட்டுக்கு வந்து மாடுகளை மட்டும் பராமரித்துவிட்டு செல்லும் கணவரின் குடும்பத்தார் வீட்டின் உள்ளே தன்னை அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பிரவீனா, வியாழக்கிழமை இரவு கிராமமக்கள் முன்னிலையில் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் குடியேறினார். 

எனது கணவர் இதுநாள் வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எதனால் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள், என்னை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது கணவரை கண்டுபிடித்து கொடுத்து என்னை அவருடன் வாழவையுங்கள் என பிரவீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

SCROLL FOR NEXT