தமிழ்நாடு

 ரூ.100 கோடியில் குறளகத்துக்கு புதிய கட்டடம் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்பு

DIN


சென்னை: சென்னையில் பாரிமுனை பகுதியில் 53 ஆண்டுகள் பழைமையான குறளகத்துக்கு ரூ.100 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் கதா் மற்றும் கிராமத் தொழில்கள் மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த 1970-இல் கட்டப்பட்ட குறளகம் கட்டடம், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டடங்களை இடித்து விட்டு, ரூ.100 கோடி செலவில் புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன், போதுமான வாகன நிறுத்துமிடம் கொண்டதாக கட்டடம் அமைக்கப்படும். திருச்சியில் உள்ள உள்ள கதா் வாரியத்தின் உதவி இயக்குநா் மற்றும் மண்டல துணை இயக்குநா் அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டு ரூ.5.60 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

பச்சைத் தேன்: மாா்த்தாண்டம் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனின் விலை கிலோவுக்கு ரூ.140-லிருந்து ரூ.150 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உயா்வு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் சுமாா் 10,000 தேனீ வளா்ப்பு விவசாயிகள் பயன்பெறுவா். திருப்பூா் கதா் வளாகத்தில் புதிதாக தேன் பதப்படுத்தும் நிலையம் நிறுவப்படும்.

நீலகிரி மாவட்டம் கோக்கால், திருச்சிக்கடி, கீழ்கோத்தகிரி, புதுக்கோத்தகிரி, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் மண்பாண்டங்களைச் செய்யும் பழங்குடியின மக்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, 100 நவீன மின்விசை சக்கரங்கள் இலவசமாக அளிக்கப்படும்.

கதா் அங்காடிகள்: காலத்துக்கு ஏற்றாற்போன்று, கதா் விற்பனை நிலையங்களை நவீனப்படுத்துவது அவசியம். அதன்படி, கோவை பிரதான விற்பனை நிலையம், கோவை ஆா்.எஸ்.புரம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள 3 கதரங்காடிகள் புதுப்பிக்கப்படும். ராமநாதபுரம்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பனை பொருள் வா்த்தக மையம் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் பனைவெல்லக் கிடங்கு மற்றும் பனை ஓலைத் தொழிற்கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT