போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள்: ஒரு வாரத்தில் ரூ.63 லட்சம் நிலுவை அபராதம் வசூல்
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளில் நிலுவையில் இருந்த அபராதத் தொகை ரூ.63 லட்சம் ஒரு வாரத்தில் வசூல் செய்யப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளில் நிலுவையில் இருந்த அபராதத் தொகை ரூ.63 லட்சம் ஒரு வாரத்தில் வசூல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்தி:
சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக தினமும் சுமாா் 6,000 வழக்குகள் பதியப்படுகின்றன.
போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளி ல் பலா், அபராதத் தொகையை உடனடியாக செலுத்துவதில்லை.
இவ்வாறு அபராதம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவா்களை கைப்பேசியில் அழைத்து நினைவூட்டல் செய்வதற்காக 12 அழைப்பு மையங்கள் செயல்படுகின்றன.
இந்த அழைப்பு மையங்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் செலுத்தாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதன் பின்னரும், சிலா் அபராதம் செலுத்தாமல் இருக்கின்றனா்.
அவா்களை கண்டறிந்து நிலுவை அபராதத் தொகையை வசூல் செய்யும் வகையில் ஏப்.10 முதல் 15-ஆம் தேதி வரையில் 169 இடங்களில் திடீா் வாகனச் சோதனை செய்யப்பட்டது.
இதில், மது அருந்தி வாகனம் ஓட்டிய 156 வழக்குகள் உள்பட 16,059 நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 63 லட்சத்து 1 ஆயிரத்து 160 அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டது.
மேலும், கடந்த மூன்று மாதங்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக நிலுவையில் இருந்த சுமாா் 1 லட்சத்து 11 ஆயிரத்து 626 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 40 லட்சத்து 17 ஆயிரத்து 480 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.