தமிழ்நாடு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்

DIN

நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி விழா புதன்கிழமை தொடங்கியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்க் கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில், கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில், வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி துவக்க விழாவும் புதன்கிழமை நடைபெற்றது. காலை 11 மணியளவில் மலர்க் கண்காட்சியை, சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி தொடக்கி வைத்தார்.

இதனையடுத்து படகு குழாமில் மிதிப்படகுகளை அவர் இயக்கி வைத்தார். அதன்பிறகு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த 22 அரங்குகளை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார் தலைமை வகித்தார். எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் வல்வில்ஓரியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பழங்குடியின மக்களின் சேர்வை ஆட்டம் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

40,000 ரோஜாக்களால் சோட்டாபீம் பொம்மை :

கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில்  மலர்க் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதனையொட்டி, 40,000 ரோஜாக்களால் சோட்டாபீம் பொம்மை, 25,000 ரோஜாக்களால் கங்காரு, 20 ஆயிரம் மலர்களால் முயல்,  15 ஆயிரம் மலர்களால் இதயம், மேலும், 35 ஆயிரம் மலர் அலங்காரங்கள் என மொத்தம் 1,35,000 மலர்களால் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், குழந்தைகள், பெரியவர்களை கவரும் வண்ணம் காய்கறிகளில் பொம்மன், மயில்கள் உருவம், கருணாநிதி நூற்றாண்டு விழா வளைவு என பலவகை அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலர்கள் இடம் பெற்றுள்ளன.

மருத்துவப்பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர், பயன்படும் பகுதி, மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விழாவில், நாமக்கல் கோட்டாட்சியர் மா.க.சரவணன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அ.மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கி.கணேசன்,  அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர், ஆட்சியர், எம்பிக்கள் பங்கேற்கவில்லை

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை பொருத்தமட்டில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட, பிற மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்பதில்லை. அவ்வாறு பங்கேற்றால் அடுத்த சில மாதங்களில் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் கடந்த ஆண்டுகளில் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்துள்ளனர்.

தற்போதயை தமிழக  வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விழாவுக்கு வரவில்லை. மாவட்ட ஆட்சியர் ச.உமாவும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.  மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால் அவர்களும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் அத்தொகுதி எம்எம்எல்ஏ கே.பொன்னுசாமி தலைமையிலேயே விழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை வில்வித்தை போட்டி, பரிசளிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.                       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT