களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் புதன்கிழமை இரவு பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த அதிர்ச்சியில் அவரது தாத்தா உயிரிழந்தார். மாணவருக்கு வெட்டு விழுந்ததை தடுக்க வந்த சகோதரியும் படுகாயமடைந்தார்.
நான்குனேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (17). இவர் வள்ளியூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். அங்கு பள்ளியில் அவருக்கும், சக மாணவர்களுக்குமிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு நான்குனேரி பெருந்தெருவில் உள்ள மாணவர் சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சின்னதுரையை வெட்டியுள்ளது. இதனைத் தடுக்க வந்த அவரது சகோதரி சந்திரசெல்வியையும் அந்த கும்பல் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பியது. இந்த அதிர்ச்சியில் அவரது தாத்தா கிருஷ்ணன் (60) உயிரிழந்தார்.
இதையடுத்து, உறவினர்கள் நான்குனேரி சாலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய பின் மறியல் கைவிடப்பட்டது.
இந்தநிலையில், படுகாயமடைந்த மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி சந்திரசெல்வி ஆகியோர் நான்குனேரி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நான்குனேரி போலீசார் வழக்குப் பதிந்து இதில் தொடர்புடைய 3 பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.