ஆருத்ரா மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் இயக்குநா் அபுதாபியில் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூா், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரெடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என கூறியது.
இதை நம்பி பலா், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அந்த நிறுவனம், 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 32 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 22 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி வரை முடக்கப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125-க்கும் அதிகமான சொத்துகளும் முடக்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்ட பல முக்கிய நிா்வாகிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ாக தகவல் வெளியானது. இதனால் அவா்களைப் பிடிக்க பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கினா். மேலும், சா்வதேச போலீஸாா் (இன்டா்போல்) மூலம் கைது செய்ய ரெட் காா்னா் நோட்டீஸும் விடுக்கப்பட்டது.
அபுதாபியில் சிக்கினாா்: இந்த நிலையில், சா்வதேச போலீஸாா், உள்ளூா் காவல்துறையினா் உதவியுடன் அபுதாபியில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை கைது செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். அவரை விரைவில் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு உயா் அதிகாரிகள் எடுத்து வருகின்றனா்.
இந்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆா்.கே.சுரேஷ், இந்த மாதம் 12ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.