மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி திருவொற்றியூா் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்துள்ளனா்.
திருவொற்றியூா் மேற்கு பகுதியில் கடந்த 5 நாள்களாக வெள்ளநீா் வீடுகளுக்குள் தேங்கியுள்ளது. ராஜாஜி நகா் அம்மன் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (54). வீட்டில் கட்டிலில் படுத்திருந்த இவருக்கு புதன்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் மழைநீா் தேங்யிருந்ததால் மின்சாரம் தடைபட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் தனலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதே தெருவைச் சோ்ந்த சுமதி என்ற 90 வயது மூதாட்டி, கட்டிலில் இருந்து கீழே விழுந்து வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
ராஜா சண்முக நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த சத்தியநாராயணன் (38) புதன்கிழமை இரவு உணவு வாங்கி வருவதற்காக மணலி விரைவு சாலையைக் கடக்க முயன்றபோது அங்குள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சூரஜ் குமாா் (22), மணலி புதுநகா் ஈச்சங்குழியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். இவா் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மழைநீா் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.