உபயதுல்லாவின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு என்று முதல்வரும் கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சரும் கட்சி வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கருணாநிதி மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கட்சிப் பணியாற்றி வந்த உபயதுல்லா, என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர். 1962-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கருணாநிதி தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கட்சியை வளர்த்த தீரர்.
1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா. நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க- ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிரா அணி சாம்பியன்!
முத்தமிழறிஞர் மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா முப்பதாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கட்சிப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு திமுக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதினையும்", இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் "அண்ணா விருதினையும்" எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.
கட்சி நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் உபயதுல்லா. கட்சியின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய உபயதுல்லாவின் மறைவு கட்சிக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கட்சிக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும்.
உபயதுல்லா இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கட்சி உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.