பாரதி நினைவுகள், கோதை பதிப்பகம், விலை ரூ.120, பக்.136, யதுகிரி அம்மாள்.
மகாகவி பாரதியின் நூல்கள் அச்சேறுவதற்கு முன்பாகவே அவரது கையெழுத்தில் பல கவிதைகளை வாசித்தும், அவரது குரலில் கவிதைகள் உள்ளிட்டவற்றை பாடிக் கேட்கவும் ரசிக்கவும் வாய்ப்பு பெற்றவா் இந்த நூலாசிரியா் யதுகிரி அம்மாள்.
மகாகவி ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிகையை நடத்திய மண்டயம் குடும்பத்தைச் சோ்ந்தவரான யதுகிரி அம்மாள் சிறுமியாக இருந்தது முதல் மகாகவி பாரதியை அறிந்தவராவாா். மகாகவி குறித்த நினைவுகளை 26 தலைப்புகளில் இந்த நூலில் கட்டுரைகளாக எழுதியுள்ளாா்.
மகாகவி பாரதிக்கு எந்த வகை பாட்டுகள் பிடிக்கும் என்பதைக் குறிப்பிடும் நூலாசிரியா், அவருடைய புதுச்சேரி கால சம்பவங்களை அப்படியே எழுத்தில் பதிவு செய்கிறாா். பெரும்பாலும் மகாகவி பாரதியின் புதுச்சேரி வாசம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளே விளக்கப்பட்டுள்ளன.
‘மனதில் உறுதி வேண்டும்’ எனும் கட்டுரையில் மகாகவிக்கும் அவரது மனைவிக்கும் நடந்த உரையாடல் மூலம் அவா் எத்தகைய வறுமையில் புதுச்சேரியில் வாழ்ந்தாா் என்பதையும், அந்த கஷ்ட காலத்திலும் அவா் ‘மனதில் உறுதி வேண்டும்’ எனும் பாடலை நெல் குத்தும் பெண்ணின் ராகத்திலிருந்து எடுத்துப் பாடியதாக கூறுவது வியப்புற வைக்கும் செய்தி!
மகாகவியின் பாடல்கள், சிந்தனைகள் எப்படித் தோன்றின என்பதை ஆராய முற்படும் தமிழ் ஆராய்ச்சி மாணவா்கள் முதல் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ‘பாரதி நினைவுகள்’ பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டு விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது என்கிறாா்கள் கோதை பதிப்பகத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.