புவி வட்டப் பாதையில் பயணித்துவரும் சந்திராயன் - 3 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுப் பாதை தொலைவு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது.
எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை தொலைவு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதை தொலைவை அதிகரிக்கும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
தற்போது விண்கலம் குறைந்தபட்சம் 173 கிமீ. தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீ. (41,762 கி.மீ. X 173 கி.மீ) தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வருகிறது என பதிவிட்டுள்ளது.
எதிா் வரும் நாள்களில் திட்டமிட்டபடி அடுத்தடுத்து சுற்றுப் பாதைகளின் தொலைவை அதிகரித்து நிலவை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.