கோப்புப்படம் 
தமிழ்நாடு

எந்த  சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இரு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்றபோது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்?

DIN

இரு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்றபோது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? என அவரை அமைச்சராக நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிப்பார் என கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல், செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக ஜூன் 29-ஆம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தார்.

48 மணி நேரம் காவலில் இருந்தாலே... இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.ராகவாச்சாரி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்து விட்டார். அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என வாதிட்டார்.

அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, 'இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்றபோது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்?' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்குரைஞர் வி.ராகவாச்சாரி 'எம்எல்ஏவாக அவர் நீடிக்கலாம். ஆனால் எந்த துறையும் இல்லாமல் அமைச்சராக நீடிக்க முடியாது. மனீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்கவில்லை. சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்ற வழக்கு இதுதான் முதல்முறை. இதுபோன்ற வழக்கு வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை.

நீதிமன்றத்துக்கு அதிகாரம்: இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 163, ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கிறார்.

அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. வழக்கு விசாரணையில் அவர் தலையிட வாய்ப்புள்ளது என்ற அச்சம் உள்ளதால், முதல்வரே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என ஜெயவர்த்தன் தரப்பில் வாதிடப்பட்டது.

எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சக்திவேல், 'செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. நீக்கத்துக்கும், அதை நிறுத்தி வைத்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் எந்த பதவியிலும் இல்லை. அவருக்கு மீண்டும் பதவிப் பிரமாணமும் செய்து வைக்கப்படவில்லை' என வாதிட்டார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுத் தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT