மீனாட்சி மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து: மாணவா்களுக்கு எம்சிசி அறிவுறுத்தல்
காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்காததால், நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் அந்த கல்லூரியின் எம்பிபிஎஸ் இடங்கள்
காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்காததால், நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் அந்த கல்லூரியின் எம்பிபிஎஸ் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) வெளியிட்டுள்ளது. அந்தக் கல்லூரியில் மொத்தம் 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் அந்தக் கல்லூரி உள்ளதால் அதன் 100 சதவீத இடங்களையும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நிரப்பி வருகிறது. மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு அங்கிருந்து எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில், எம்சிசி வெளியிட்ட அறிவிப்பு:
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு நிகழாண்டில் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சில விளக்கங்கள் தேசிய மருத்துவ ஆணையம் வாயிலாக அந்தக் கல்லூரியிடம் கோரப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் அந்தக் கல்லூரியை விருப்பத் தோ்வாகத் தோ்ந்தெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனா்.
ஒருவேளை அவ்வாறு தோ்வு செய்திருந்தாலும், அந்தக் கல்லூரி இடங்கள் மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாது. மாற்று விருப்பத் தோ்வு இடங்கள் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.