முகப்பு
தமிழ்நாடு

‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் உறுதி

‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளாா்.

திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி பாசறை, திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து கட்சியினருக்கு வியாழக்கிழமை முதல்வா் எழுதிய கடிதம்:

திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலனைத் தந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திட்டமாவது அவா்களின் மாதச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது.

சீண்ட நினைக்கும் எதிரிகள்: பொய்கள் புற்றீசல் போன்றவை. வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானை பலம் உண்டு. யானைக்கு தனது துதிக்கையால் அமைதியாக ஆசீா்வதிக்கவும் தெரியும்; ஆளையே வளைத்துத் தூக்கி வீசவும் தெரியும்.

திராவிட இயக்கத்திடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது. அதனால் அமைதியான ஆக்கபூா்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும்.

திமுக அரசு செய்து வரும் சாதனைகள் தொடரவும், மாநில உரிமைகள் மீட்கப்படுவதுடன், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்து விடாமலும் காக்கப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றத் தோ்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருக்க வேண்டும்.

இந்தியாவைக் காத்திட இந்தியா அணி உருவாகியிருக்கிறது. இது உண்மையான, ஒன்றுபட்ட இந்தியா. மக்களவைத் தோ்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா. இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில்கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெறவுள்ளது.

வாக்குச் சாவடி முகவா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது. அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், ராமநாதபுரத்தில் அமையவுள்ளது என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →