கோவை: கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர், சில மணிநேரத்தில் வாகனம் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - ஓசூர் சாலையில் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை அலுவலக உதவியாளர் விஜய் என்பவர் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அறையின் கதவை உள்பக்கமாக பூட்ட முயற்சி செய்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலக உதவியாளர் விஜய், அந்த மர்ம நபரை வெளியே செல்லுமாறு கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “நேற்று மாலை 5:47 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் அலுவலகத்துக்குள் நுழைந்தார். பின்னர் நான் தனியாக இருப்பதை அறிந்த அவர் கதவினை உள்பக்கமாக தாழிட முயற்சி செய்தார். நான் அவரை விரட்டி விட்டேன். எனக்கு இந்த நபர் மீது மிகவும் சந்தேகமாக உள்ளது. இவர் யார்? எதற்காக உள்ளே நுழைந்தார்? என்று விசாரிக்க வேண்டும்” என புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
புகாரை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்தனர். மேலும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவிநாசி சாலையில் மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த நபர்தான் பாஜக அலுவலகத்துக்குள் புகுந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் விபத்து நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர் எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தில் பலியானாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா, எதற்காக பாஜக அலுவலகத்துக்குள் நுழைந்தார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.