2 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம்: அன்புமணி கண்டனம்
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் கொடுத்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் கொடுத்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்க மறுத்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், அவற்றுக்கு ஓராண்டுக்கு மட்டும் இடைக்கால அங்கீகாரம் வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு மாற்றாக ஓராண்டுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தையும் மருத்துவ ஆணையம் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தவரையில் எந்தக் குறையும் இல்லை. மாறாக, ஆதாா் மூலமான கைரேகைப் பதிவு வருகைப் பதிவேட்டு முறையைச் செயல்படுத்துவதில் தான் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆதாா் மூலமான கைரேகைப் பதிவு வருகைப் பதிவேட்டு முறையில், மருத்துவப் பேராசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கு கூட வசதி இல்லை என்றும், நடைமுறை சாத்தியமற்ற அந்த முறையை செயல்படுத்தும்படி, எந்தவிதமான கலந்தாய்வும் நடத்தாமல் தன்னிச்சையாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது தான் அனைத்துக்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் குறை போக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் மாநிலத்துக்கு மிகவும் முக்கியமானவை. நடைமுறை சாத்தியமற்ற விதிகளைச் செயல்படுத்த கட்டாயப்படுத்தி, அதில் உள்ள குறைகளை பெரிதாக்கிக் காட்டி, அங்கீகாரத்தை ரத்து செய்வது நியாயமல்ல என்று கூறியுள்ளாா்.