தமிழ்நாடு

ஆத்தூர் அருகே  கணவன் வீட்டு முன்பு மனைவி தர்னா: காவல் நிலையம் முன்பு கணவன் தர்னா!

DIN

 
ஆத்தூரில் காதல் கணவனை சேர்த்து வைக்கக் கோரி காதல் கணவன் வீட்டு முன்பு காதலியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது காதல் கணவன் விக்னேஷ் இருவரும் மாறி மாறி தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் தீபிகா (21) பொறியியல் பட்டதாரியான இவருக்கு, ஆத்தூர் கண்ணாடி பில் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவி மகன் விக்னேஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

இந்த நிலையில் தீபிகா திருச்சியில் வேலையில் சேர்வதற்காக சென்றுள்ளார். அப்போது திருச்சியில் உள்ள தனியார் அகாடமி ஒன்றில் எஸ்.ஐ தேர்வுக்காக பயிற்சி பெற விக்னேஷ் அங்கு வந்துள்ளார்.

இதையடுத்து திருச்சியில் இருவரும் நெருங்கி பழகி மீண்டும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில் இவர்களது காதல் காதலன் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் விக்னேஷ் எஸ்.ஐ தேர்வில் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் மேலும் பயிற்சி பெறுவதற்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் அகாடமியில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். இதனால் காதலர்கள் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து தீபிகா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவரது குடும்பமும் சென்னை தரமணிக்கு சென்றது. மேலும் தூத்துக்குடிக்கு சென்ற விக்னேஷ் மீண்டும் தீபிகாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு தனது காதலை வளர்த்து வந்துள்ளார். ஆனால் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்துகொள்வதில் காலதாமதம் செய்து வந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தீபிகா ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையின் போது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் எழுதி கொடுத்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றார். ஆனால் அதன்பின் அவர் கடந்த ஓராண்டு காலமாக எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் தீபிகா தவித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் விக்னேஷ் கோவையில் எம்பிஏ படித்து வருவதாக கடும் முயற்சிக்கு பின்னர் தீபிகா கண்டறிந்தார். இதைடுத்து அவரை அங்கிருந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்களிடம் விசாரணை செய்த கண்காணிப்பாளர் மேல் விசாரணைக்காக ஆத்தூர் அரசு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார் தான் தீபிகாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதை அடுத்து காவல் நிலையத்தில் வைத்து தீபிகாவுக்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் சென்னை தரமணி உள்ள தீபிகாவின் வீட்டில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார். திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தீபிகா-விக்னேஷ் உடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த விக்னேஷ் மனைவி தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து ஆத்தூர் வந்துள்ளார்.

பின்னர் இது குறித்து தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்குள்ளவர்கள் உதவியுடன் தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜரான விக்னேஷ் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை, போலீசாரின் வற்புறுத்தல் காரணமாக தீபிகாவுக்கு தாலி கட்டியதாகவும், இது செல்லாது என நீதிமன்றம் செல்ல இருப்பதாக காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தாருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலன் விக்னேஷ்.

இதையடுத்து தரமணி போலீசார் இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு சென்று உங்களுடைய பிரச்னையை தீர்த்துக் கொள்ளவும் என அறிவுறுத்தி அனுப்பி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஆத்தூர் வந்த தீபிகா கண்ணாடி மில் சக்தி நகரில் உள்ள காதல்  கணவன் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு விக்னேஷின் பெற்றோர்கள் தீபிகா வீட்டிற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், தீபிகா அவரது வீட்டில் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து விக்னேஷின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்தூர் மகளிர் போலீசார் விக்னேசை மிரட்டி திருமணம் நடத்தி வைத்ததை ஏற்க மாட்டோம் என கூறி தனது குடும்பத்தாருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் மனைவி தீபிகா மற்றும் காதலன் விக்னேஷ் இருவரும் மாறி மாறி தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

SCROLL FOR NEXT