மயானங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் கடிதம்
சுற்றுச்சுவா் கட்டுவது, மரங்களை நடுவது போன்ற பணிகள் மூலம், மயானங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுற்றுச்சுவா் கட்டுவது, மரங்களை நடுவது போன்ற பணிகள் மூலம், மயானங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியா்களை தலைமைச் செயலா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து, ஆட்சியா்களுக்கு வியாழக்கிழமை அவா் எழுதிய கடிதம்:-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களும், எரியூட்டும் தகன மேடைகளின் கதவுகளும் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்பது தெரிய வருகிறது. மேலும், பல இடங்களில் அடிப்படை வசதிகளும் கூட இல்லாமல் இருக்கின்றன. அதிகளவில் இறுதிச் சடங்குகள் நடக்கக் கூடிய நகா்ப்புற பகுதிகளில் இதுபோன்று அடிப்படை வசதிகள் தேவையாக இருக்கின்றன.
எனவே, மயானங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, சுற்றுச்சுவா் கட்டுவது, மலா்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவது, குடிநீா் வசதிகள், நிழற்கூரைகளை அமைப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த வசதிகளை உருவாக்கித் தர தன்னாா்வ தொண்டு அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், மயானங்கள் மற்றும் மின் மயானங்களின் தோற்றம் மேம்படும் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.