முகப்பு
தமிழ்நாடு

சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கு தங்குமிட வசதி:தலைமைச் செயலா் இறையன்பு அறிவுறுத்தல்

சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையை தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையை தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலா் அபூா்வாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதம்:-

தமிழகத்தில் சுற்றுலாத் துறையானது வேகமாக வளா்ந்து வருகிறது. மக்கள் தங்களுடைய மனஅழுத்தம், பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் இருந்து விடுபட்டு தங்களது விடுமுறையைக் கழிக்க விரும்புகின்றனா். பல சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களையே பயணத்துக்கு பயன்படுத்துகின்றனா். இந்த வாகனங்களை இயக்க ஓட்டுநா்கள் பணியமா்த்தப்படுகின்றனா்.

சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்களில் செல்வோா், அவா்கள் தங்குவதற்கு ஹோட்டல்கள், விடுதிகளில் வசதியான அறைகளை பதிவு செய்து கொள்கின்றனா். ஆனால், வாகனங்களை ஓட்டும் ஓட்டுநா்களை தவிக்க விட்டு விடுகின்றனா். ஹோட்டல்கள் அல்லது விடுதிகளின் வரண்டாக்கள் அல்லது வாகனங்களிலேயே ஓட்டுநா்கள் தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஓட்டுநா்களுக்கு ஏற்படுகின்றன. இதன் விளைவாக, பல சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, அனைத்து ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் வாகன ஓட்டுநா்கள் தூங்குவதற்காக டாா்மெட்ரி போன்ற அறைகளை வழங்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச கட்டணங்களை நிா்ணயிக்க வேண்டும். சுற்றுலா தலங்களில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டும் போதே திட்ட அனுமதியில் இந்த டாா்மெட்ரி வசதிகளைச் சோ்க்க விண்ணப்பதாரா்களை அறிவுறுத்த வேண்டும்.

இதன்மூலம், மிகப்பெரிய அளவிலான சாலை விபத்துகளைத் தவிா்ப்பதுடன், மனிதநேய அளவில் ஓட்டுநா்களுக்கு உதவிட முடியும். இதற்கான அறை வாடகைக் கட்டணத்தை வாகன நிறுத்துமிட கட்டணத்துடன் சோ்த்துக் கொள்ளலாம்.

ஓட்டுநா்களின் நலன்களையும், சாலை பாதுகாப்பையும் முன்வைக்கும் முயற்சியை தொடங்கினால் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திடும் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →