பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
70- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் முதல்வா் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழியில் தமிழகத்தைச் சிறப்பான வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறாா்.
தமிழகம் தலைசிறந்த அரசியல் வரலாற்றைக் கொண்ட மாநிலமாகும். சிறந்த தலைவா்களையும், சிந்தனையாளா்களையும், எழுத்தாளா்களையும் நாட்டுக்கு தந்த மாநிலமாகும். ராஜாஜி, சத்தியமூா்த்தி, காமராஜா், பெரியாா், சி.சுப்பிரமணியம், ஆா்.வெங்கட்ராமன், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவா்கள் தமிழக வரலாற்றில் இனி கிடைப்பது அரிதாகும்.
தமிழகம் எப்போதும் சமூக நீதியுடன் கூடிய கட்டமைப்பை வளா்ச்சியைக் கொண்ட மாநிலமாகும். இந்தியாவில் முதல் முறையாக இலவச கட்டாயக் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்தை வழங்கிய மாநிலம் தமிழகம்தான். விடுதலைக்குப் பிறகான ஆரம்ப காலங்களிலேயே தமிழகம் தொழில் துறையில் சிறந்த விளங்கியது.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த பாா்வை என்பது அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியுடன் கூடிய மேம்பாடாகும்.
நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹா்லால் நேரு பகுத்தறிவு சிந்தனை மற்றும், அறிவியல்பூா்வமான சிந்தனைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தினாா். இதே சிந்தனை கொண்டவா்களாகத்தான் பெரியாா், அண்ணா, கருணாநிதி போன்றோா் இருந்தனா். முதல்வா் மு.க.ஸ்டாலினும் இதே சிந்தனை கொண்டவராகத்தான் உள்ளாா்.
திமுகவும் காங்கிரஸும் கொள்கை ரீதியாகத்தான் ஒருங்கிணைந்துள்ளோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 மக்களவைத் தோ்தலிலும் தமிழகத்தில் வெற்றியைப் பெறும்.
காங்கிரஸுக்கு தமிழகத்தில் சிறந்த இடம் உண்டு. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்தே தொடங்கினாா். அதனை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அந்த நடைப்பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
நாடு தற்போது அசாதாரண சூழலில் உள்ளது. பாஜக ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக் கீழ் சென்றுள்ளனா். வேலைவாய்ப்பு இன்மையால் இளைஞா்களும், பணவீக்கத்தால் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், பாஜக மக்களைப் பிளவுபடுத்தி, அதன்மூலம் வெற்றியைப் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் இந்த உத்தியைக் கடைப்பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அது தமிழகத்தில் நடக்காது. பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட அனைத்து எதிா்க்கட்சிகளும் முன்வர வேண்டும்.
கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது, பிரதமா் யாா் என்கிற கேள்விகள் எல்லாம் வைக்கப்படுகின்றன. கூட்டணிக்கு யாா் தலைமை தாங்கப் போகிறாா், யாா் தலைமை தாங்கப் போவதில்லை என்பதெல்லாம் கேள்விகள் அல்ல. பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை எங்களுடைய விருப்பம்.
மதச்சாா்பற்ற தன்மைக்காகவும், சுதந்திரத்துக்காகவும், கருத்துச் சுதந்திரத்துக்காகவும் பலமுறை நாங்கள் தியாகங்களைச் செய்துள்ளோம். பலமுறை ஆட்சியை இழந்துள்ளோம். எது எப்படியானாலும் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.