அமைச்சா் செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான வி.செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்கு
தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான வி.செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் 30.7.2021-இல் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தா்மராஜ் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோன்று, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘உயா்நீதிமன்றத்தின் உத்தரவு முற்றிலும் நிலைக்கத்தக்கதல்ல. இதனால், மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. உயா்நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றப் புகாா் பதிவு செய்ய மீட்டெடுக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரி சட்டப் பிரிவு 178(8) விதிகளின் கீழ் மேலும் ஓா் அறிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மாநகர மத்திய குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்த தவறியதாகக் கூறி ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும் வகையில் சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.