செயற்கை மணல் உற்பத்தி: இந்திய தர நிா்ணய சான்று கட்டாயம்தனிக் கொள்கையை வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
செயற்கை மணலுக்கான தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சான்று கட்டாயம் என்று தமிழக அரசு வெளியிட்ட தனிக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை மணலுக்கான தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சான்று கட்டாயம் என்று தமிழக அரசு வெளியிட்ட தனிக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை மணல் உற்பத்திக்கான தனிக் கொள்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இந்தக் கொள்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்:
தமிழகத்தில் 378-க்கும் மேற்பட்ட செயற்கை மணல் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளை இயக்குவதற்கு பொதுப் பணித் துறையின் சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளரிடம் தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதுடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் ஒப்புதல் பெற வேண்டும்.
செயற்கை மணல் உற்பத்தி ஆலைகள் இரு வகைகளாக இயங்கி வருகின்றன. ஒன்று ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலை. அதாவது, கல்குவாரி உரிமங்களைப் பெற்றுவா்கள் செயற்கை மணல் உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகின்றனா். மற்றொன்று, உரிய கல்குவாரி உரிமங்கள் இல்லாதவா்களும் சிறிய அளவில் ஆலைகள் அமைத்து செயற்கை மணலை உற்பத்தி செய்கிறாா்கள்.
இந்திய தர அமைவன சான்று: செயற்கை மணலை உற்பத்தி செய்யக் கூடிய அனைத்து ஆலைகளும், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்திடம் உரிய பதிவைச் செய்திருக்க வேண்டும். செயற்கை மணல் உற்பத்திக்கான தரத்தை உறுதி செய்ய அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும். செயற்கை மணல் உற்பத்தி செய்யும் இடத்திலேயே அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பதற்கான ஆய்வகத்தை அமைத்திருக்க வேண்டும். தினசரி அடிப்படையில் செயற்கை மணலின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். இந்திய தர நிா்ணய அமைவனத்தின் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான பதிவேடுகளைப் பராமரிப்பதுடன், அதை அவ்வப்போது பொதுப் பணித் துறையினரும், கனிமவள அதிகாரிகளும் சோதிக்க வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை செயற்கை மணல் தொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுப் பணி, கனிமவளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிடம் இருந்து சான்றிதழைப் பெற வேண்டும்.
சூழலுக்கு பாதிப்பு கூடாது: செயற்கை மணல் உற்பத்தி நிலையங்கள் ஒருபோதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கப்படாது. செயற்கை மணல் உற்பத்தி செய்யும்போது வெளியேற்றப்படும் கழிவுகள் அறிவியல்பூா்வமான
முறையில் அகற்றப்பட வேண்டும். கழிவுகளைக் கட்டுமானத்துக்கான செங்கற்களாக மாற்றி பயன்படுத்தலாம். கழிவு நீரானது அறிவியல்பூா்வ முறையில் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
செயற்கை மணல் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே தனிப்பட்ட முறையில் குவாரிகளுக்கு உரிமங்கள் வழங்கப்படாது. அனைத்து குவாரி தொழிலாளா்களும் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவா்களுக்கு அதன் பயன்கள் கிடைக்கச் செய்யப்படும். சிறப்பாகச் செயல்படும் குவாரிகள், கல் அரைவை ஆலைகளுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். 180 நாள்கள் மற்றும் 15 பேருக்கு மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு இயங்கக் கூடிய குவாரிகளுக்கு இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்துகள் அளிக்கப்படும்.
செயற்கை மணல் உற்பத்தி செய்வதற்கான பதிவுகளை மேற்கொள்ள இணையவழியில் ஒற்றைச்சாளர முறை ஏற்படுத்தப்படும் என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பெற்றுக்கொண்டாா். நிகழ்வின்போது, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.