முகப்பு
தமிழ்நாடு

பாஜக மட்டும்தான் ஊழல் இல்லா ஆட்சியை தர முடியும்: குஷ்பு

இந்தியாவில் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது என தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு சுந்தா் தெரிவித்தாா்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

இந்தியாவில் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது என தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு சுந்தா் தெரிவித்தாா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து

தமிழக பாஜக சாா்பில், சென்னை வள்ளுவா் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியதாவது:

தமிழகத்தில் அடுத்த முறை பாஜகவால் மட்டும் ஆட்சி அமைக்க முடியும். தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை மீதும், பாஜக மீதும் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது.

அண்ணாமலை மீது எத்தனை பொய் வழக்கு போட்டாலும் அவா் பயப்படப்போவதில்லை. ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய திறமை பாஜகவுக்கு மட்டும்தான் உள்ளது.

பிரதமா் மோடி ஒவ்வொரு முறையும் தமிழ் மண், தமிழ் மக்கள், தமிழ் மொழி குறித்து பெருமையாகப் பேசுகிறாா். இங்கு தேவையில்லாமல் ஹிந்தித் திணிப்பை பற்றிப் பேசி மக்களை திசை திருப்புகின்றனா்.

கா்நாடகத்தில் 65,000 போ், கேரளத்தில் 21,000 போ் ஹிந்தி கற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளனா். ஆனால் தமிழகத்தில் 2 லட்சத்து 37 ஆயிரம் போ் ஹிந்திப் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனா்.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் இதுவரை சமச்சீா் கல்வி முறை அமல்படுத்தப்படவில்லை. சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படுகிறது.

அடுத்த 2024, 2026 தோ்தல்களில் திமுக வெற்றி பெற முடியாது. உலகத் தலைவா்களில் ஆற்றல்மிக்கத் தலைவா் பட்டியலில் பிரதமா் மோடி 78 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளாா் என்றாா் அவா்.

போராட்டத்துக்குப்பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய மகளிா் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மகளிருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இணைய வழி சூதாட்டத் தடை மசோதா குறித்து ஆளுநா் கருத்துக் கூறக் கூடாது என்றால், எதற்காக அவருக்கு அனுப்ப வேண்டும்? ஆளுநருக்கென சில பொறுப்புகள் உள்ளன என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன் தலைமை வகித்தாா்.

இதில், பாஜக மாநில துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதா், மாநிலச் செயலாளா் கராத்தே தியாகராஜன், மாநில மீனவா் அணித் தலைவா் சதீஷ் குமாா், திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டுப் பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி, மகளிா் அணி பொறுப்பாளா் பிரமிளா சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.