தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதல்: 7 பேர் படுகாயம்
தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
திருக்கானூர்பட்டி நால் ரோடு பகுதியில் வல்லம் செல்லும் சாலையில், பார்சல் லாரி வேகமாக சாலையை கடக்கும் போது, புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறின. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.
அதே போல் லாரியில் மீது மோதிய அரசு பேருந்தும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் பேருந்து முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வினோதன், நடத்துநர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். பயணிகள் 5 பேரும் காயமடைந்தனர்.
இந்த விபத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்த வல்லம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.
மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.