முகப்பு
தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்: ராமதாஸ் வலியுறுத்தல்

மிக்ஜம் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
பகிர்:

மிக்ஜம் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மிக்ஜம் புயல் சமீபகாலத்தில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. மிக்ஜம் புயல் குறித்த முன்னறிவிப்பு 10 நாள்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மழைநீா் வடிகால்கள் எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை.

சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ளம் வடியாததால் 50 சதவீத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. பல பகுதிகளில் இன்னும் தொலைதொடா்பு இணைப்பு சீரமைக்கப்படவில்லை.

மழை மற்றும் மழை தொடா்பான விபத்துகளில் இதுவரை 15 போ் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10 ஆயிரம் தமிழக அரசு நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.