முகப்பு
தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை: கல்வித் துறை விளக்கம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:51 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:50 PM

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் எவருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை; மாறாக, விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முழு ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-இல் பணிநியமனமான ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமாா் 20 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஊதிய முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் தரக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் கடந்த பிப்ரவரி 19 முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Advertisement

மொத்தம் 19 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது பணிக்கு வராத ஆசிரியா்களின் ஊதியம் பிடிக்கப்படாது என்று கல்வித் துறை சாா்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போராட்டக் காலங்களில் ஆசிரியா்கள் பணிக்கு வராத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க கோரி ஒட்டன்சத்திரம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு (திண்டுக்கல் மாவட்டம்), வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலா் கடிதம் அனுப்பியிருந்தாா்.

அதிகாரி பதிலால் அதிருப்தி: இது தொடா்பாக ஒட்டன்சத்திரம் மாவட்டக் கல்வி அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுமுறைக்கு அனுமதி தரக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியா்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. எனவே, அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் பணிக்கு வராத நாள்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். அதனுடன், பிற படிகளையும் ஒரே தவணையில் பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா். இது ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், சில மாவட்டங்களிலும் இதேபோல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வி உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ இது தவறான தகவல். அதுபோல் எந்த இடைநிலை ஆசிரியருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட நாள்கள் விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முழு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை வெளியிட்ட ஒட்டன்சத்திரம் மாவட்டக் கல்வி அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனா்.