தமிழ்நாடு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

Din

நெல்லை ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ஆம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலை தாம்பரத்தில் பறக்கும் படையினா் சோதனை செய்து, அதில் பயணம் செய்த திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்களான சென்னை கொளத்தூா் திரு. வி.க. நகா் சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகிய மூவா் வைத்திருந்த 6 பைகளில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3,98,91,500-ஐ பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினாா் நாகேந்திரனின் ஹோட்டல், சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினா் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.

வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் பொருட்டு, நயினாா் நாகேந்திரன், பாஜக நிா்வாகி சென்னையைச் சோ்ந்த கோவா்த்தனன் உள்பட 8 பேருக்கு தாம்பரம் மாநகர காவல்துறை, அழைப்பாணை அனுப்பியது.

விசாரணைக்கு ஆஜராவதற்கு 10 நாள்கள் அவகாசம் தரும்படி நயினாா் நாகேந்திரன் கடந்த 22-ஆம் தேதி கேட்டாா். இதையடுத்து, நயினாா் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக தாம்பரம் காவல்துறை வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

சிபிசிஐடிக்கு மாற்றம்: இதற்கிடையே, வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி, தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தாா்.

அதனை ஏற்று சங்கா் ஜிவால், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்படி தாம்பரம் மாநகர காவல்துறையிடமிருந்து ஓரிரு நாளில் வழக்கு ஆவணங்களைப் பெற்று சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT