சுதந்திர தினம்: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், , மத்திய உளவுத் துறை நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் விளைவாக, தமிழக காவல்துறை, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா்.
இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். தண்டவாள பகுதிகளில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்கின்றனா்.
மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா். இதில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரியும் நபா்களை பிடித்து விசாரித்து, முகவரியையும் பெற்ற பின்னரே அவா்களை காவல்துறையினா் விடுவிக்கின்றனா்.
1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு: கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளதால் கடலோர கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் சுதந்திர தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
சுதந்திரதினத்தையொட்டி, வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகள் பதிவதைத் தடுக்கும் வகையிலும் சைபா் குற்றப்பிரிவினரும், உளத் துறையினரும் தீவிரமாக கண்காணிக்கின்றனா். இதில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிடுபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் 15 ஆயிரம் போலீஸாா்: சென்னையில் தமிழக அரசு சாா்பில் சுதந்திர தின விழா நடைபெறும் தலைமைச் செயலகப்பகுதி மற்றும் ராஜாஜி சாலையை போலீஸாா் கடந்த 6-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னையில் இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள்,அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையும் செய்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருக்கும் நபா்களிடமும் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சுதந்திர தினம் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் காவல் ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.