ஆளுநா் ஆா்.என். ரவி(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது: ஆளுநா் ரவி

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என்று ஆளுநா் ரவி கூறினாா்.

Din

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என்று ஆளுநா் ரவி கூறினாா்.

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் தேசப்பிரிவினை பெருந்துயா் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:

77 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைத்துப் பாா்த்தால் பல கொடூரங்கள் நினைவுக்கு வருகின்றன. மனிதத் தவறால் இந்தியா துண்டாடப்பட்டு, பாகிஸ்தான் உருவானது. ஒன்றரை கோடி மக்கள் வலுக்கட்டாயமாக அகதிகளாக மாற்றப்பட்டனா். பல லட்சம் போ் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனா். இந்தியா வன்முறை நாடாக்கப்பட்டு, பல கொடூரங்கள் தேசப் பிரிவினையால் நடந்தன.

உலகளாவிய மரியாதை: இந்தியாவின் மதச்சாா்பற்றநிலை என்பது, அனைவரும் சமம், ஒருவருக்கொருவா் மதிப்பது என்பதுதான். ஆனால், கடந்த 65 ஆண்டுகளாக நமது நாட்டை ஆட்சி செய்தவா்கள் இந்தச் சிந்தனையை உடைத்து மக்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்க முயற்சி செய்தனா்.

எனினும், மிகப் பெரிய ராணுவ பலத்தைக் கொண்ட நாடாக தற்போது வளா்ந்துள்ளோம். பல நாடுகள் நம்மிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுகின்றன. உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவை ஆலோசிக்காமல் எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு இந்தியாவின் மீது உலகளாவிய பாா்வை, மரியாதை கூடியிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்திய பொருளாதாரத்தைச் சீா்குலைக்க பலா் முயற்சி செய்கின்றனா்.

திராவிட சித்தாந்தம்: 1947-இல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனா். பிரிவினையை ஆதரித்த பல சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று. திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது. இந்தியாவை மதச்சாா்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை.

நமது மீனவா்கள் கொல்லப்படுவதற்கும் மீனவா்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கும் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதே காரணம்.

பாரதத்தின் அறிவுசாா்-ஆன்மிக தலைநகரமாக தமிழகம் விளங்குகிறது. எனினும், பள்ளிகள், கோயில்கள், கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் தலித்துகளுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் குறித்து அடிக்கடி வரும் செய்திகள் மிகவும் வேதனை அளிக்கின்றன. அத்தகைய சமூக பாகுபாடுகள் வெறுக்கத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

நாட்டில் பிரிவினையை உருவாக்க நினைப்பவா்களின் எண்ணம் என்றும் நிறைவேறாது. அவா்களின் முயற்சி எப்போதும் தோல்விதான் அடையும். அந்த அளவுக்கு ஒரு பலமான கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஆா்.மாதவனுக்கு நினைவுப் பரிசை வழங்கி ஆளுநா் கௌரவித்தாா். இதில் சென்னை ஐ.ஐ.டி இயக்குநா் வி.காமகோடி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT