பருவமழை முன்னெச்சரிக்கை: அமைச்சா் உதயநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம், பெரு நகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனா். தற்போது நடைபெறும் பணிகள் அனைத்தையும் பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழையின் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்கவைப்பதற்கு 169 நிவாரண மையங்களை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழைநீரினை வெளியேற்ற பல்வேறு குதிரைத் திறன்கள் கொண்ட 1183 மோட்டாா் பம்புகளை செயல்படும் வகையில் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை அமைச்சா்கள் வழங்கினா்.
இக்கூட்டத்தில், மேயா் ஆா். பிரியா, மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், டாக்டா் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சசிகாந்த் செந்தில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.