அமைச்சா் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
அமைச்சா் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக உயா் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி, கடந்த 1996-2001-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடிக்கு சொத்துகளை சோ்த்ததாக 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், வழக்கில் இருந்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பு வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோவின் கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை வருகிற செப். 9-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.