ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரௌடி திருவேங்கடம் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி திருவேங்கடம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி திருவேங்கடத்தை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடா்பாக ரெளடிகள் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தொடா்ந்து தேடி வருகின்றனா். இதில், சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாக கிருஷ்ணகுமாா் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்குரைஞரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
அவா் மலேசியா தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநா் நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் பிரபல ரௌடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், மறைந்த ரௌடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 27 நபர்களை செம்பியம் தனிப்பட்ட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சிலரை செம்பியம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்ற ரௌடி துபையில் இருந்து இன்று(ஆக 23) அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சென்னை செம்பியம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற செம்பியம் போலீஸார் திருவேங்கடத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 28 வது நபராக ரௌடி திருவேங்கடம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.