திருவண்ணாமலை மண் சரிவு: 7வது உடலும் மீட்கப்பட்டது
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் மலையில் நேரிட்ட மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் 2668 அடி உயர மகா தீபம் ஏற்றும் மலையின் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் சேதமடைந்ததில் 7 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். நேற்று இரவு வரை 5 உடல்கள் மீட்கப்பட்டன.
இதில், சிக்கியவர்களில் ஆறாவது நபரின் உடல் இன்று முற்பகலில் மீட்கப்பட்ட நிலையில், அதன் அருகே ஏழாவது உடலும் மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரமித்து பலர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளனர்.
இதனிடையே, ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறு இரவு வரை இடைவிடாமல் தொடர் மழை பெய்தது. ஞாயிறு மாலை 5 மணிக்கு திடீரென மகா தீப மலையை ஒட்டியுள்ள வ.உ.சி. நகர், 11வது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது.
அப்போது பெரிய பாறாங்கற்கள் மலை உச்சியில் இருந்த குடிசை வீடு உள்பட பல வீடுகள் விழுந்தன. சேறும் சகதியுமான மண் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் வீட்டுக்குள் இருந்த 7 பேர் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணி தொடங்கிய நிலையில், நேற்று மாலை ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு வரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இன்று காலை தொடர்ந்த மீட்புப் பணியின்போது மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.