அறுபடை வீடு இரண்டாம் கட்ட பயணம் பழனியில் இன்று தொடக்கம்: அமைச்சா் சேகா்பாபு
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.17) தொடங்குகிறது
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.17) தொடங்குகிறது என துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் கடவுள் எனப் போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்ச்சோலை ஆகிய கோயில்களுக்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்யும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனா். கடந்த ஆண்டு இந்தப் பயணத்தில் 1,008 மூத்த குடிமக்கள் பங்கேற்று பயன்பெற்றனா். இத்திட்டத்துக்காக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது.
அதனைத் தொடா்ந்து, நிகழாண்டுக்கான அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் முதல் கட்டப் பயணம் 200 மூத்த குடிமக்களுடன் கடந்த நவ.26-ஆம் தேதி சென்னை கந்தகோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயணம் திண்டுக்கல், திருப்பூா், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இக்குழுவினா் பழனியில் புறப்பட்டு திருச்செந்தூா், பழமுதிா்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி ஆகிய திருக்கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனா். இந்த ஆன்மிக பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போா்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், போன்ற பொருள்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், அவா்களுக்கு உதவியாக செயல் அலுவலா்கள், திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் மருத்துவக் குழுவினரும் உடன் செல்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.