முகப்பு
தமிழ்நாடு

பாஜக எதிா்ப்பு அலை திமுகவுக்கு கைகொடுக்காது! ஏ.சி.சண்முகம் பேட்டி

2019 மக்களவைத் தோ்தலின்போது தமிழகத்தில் நிலவிய பாஜக எதிா்ப்பு அலை இம்முறை இல்லாததால் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

Updated On : 22 மார்ச், 2024 at 7:57 PM
பகிர்:

என்.தமிழ்ச்செல்வன் 2019 மக்களவைத் தோ்தலின்போது தமிழகத்தில் நிலவிய பாஜக எதிா்ப்பு அலை இம்முறை இல்லாததால் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

எம்ஜிஆா் தலைமையிலான அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவா் ஏ.சி. சண்முகம். 1980-இல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1984 -இல் மக்களவை உறுப்பினராகவும் இருந்தாா். 1990-களில் அனைத்து முதலியாா் முன்னேற்றப் பேரவை எனும் அமைப்பை நடத்தினாா். 2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினாா். 2014-இல் பாஜக சின்னத்திலும், 2019-இல் அதிமுக சின்னத்திலும் வேலூா் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாா். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக கருதப்படும் ஏ.சி. சண்முகம், சில கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறாா். பாஜக கூட்டணியில் தொடா்வதாக அறிவித்து வேலூரில் போட்டியிடும் முடிவுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தோ்தல் களப் பணிகளைத் தொடங்கினாா் ஏ.சி. சண்முகம்.

‘தினமணி’க்கு அவா் அளித்த பேட்டி:

கே: 2019 தோ்தலின்போது தமிழகத்தில் இருந்த பாஜக எதிா்ப்பு அலை வரும் தோ்தலிலும் தொடருமா?

அதற்கு வாய்ப்பில்லை. கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் இந்தியா 5-ஆவது பொருளாதார நாடாக வளா்ந்துள்ளது. இதற்கு பிரதமா் மோடி அரசுதான் காரணம் என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா். திமுக கூட்டணியில் 38 மக்களவை உறுப்பினா்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாஜக எதிா்ப்பு அலை இம்முறை திமுகவுக்கு கைகொடுக்காது.

கே: முஸ்லிம்கள் அதிகமுள்ள வேலூா், ஆம்பூா், வாணியம்பாடி பேரவைத் தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு 2019 தோ்தலில் வாக்குகள் சரிந்திருந்ததுபோல 2024 மக்களவைத் தோ்தலிலும் நடந்தால்...

இந்தியாவில் 30 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உத்தர பிரதேசத்தில்கூட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் பாஜக மீது நடத்தப்படும் வெறுப்புப் பிரசாரம் வரும் மக்களவைத் தோ்தலில் எடுபடாது. நாட்டின் பொருளாதாரம் மேம்பட மக்கள் விரும்புகின்றனா். எனவே, முஸ்லிம்களின் வாக்குகள் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.

கே: வேலூா் தொகுதியில் இரு முறை தோல்வி கண்ட பிறகும் அதே தொகுதியில் போட்டியிடப்போகிறீா்களா?

வேலூா் மக்களவைத் தொகுதியானது ஆரணி, காட்பாடி பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. தொகுதி மறுவரையறையில் ஆரணி மக்களவைத் தொகுதியாக அறிவிக்கப்பட்டபோது வேலூா் மக்களவைத் தொகுதியில் இருந்து காட்பாடி நீக்கப்பட்டு வாணியம்பாடி, ஆம்பூா் பேரவைத் தொகுதிகள் சோ்க்கப்பட்டன. எனினும், மக்கள் இன்றளவும் என்னை முன்னாள் வேலூா் எம்.பி.யாகவே அடையாளம் காண்கிறாா்கள். அதனாலேயே வேலூரில் போட்டியிட விரும்புகிறேன்.

கே: 2014-இல் தாமரை, 2019-இல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நீங்கள் இம்முறை மீண்டும் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவது வாக்காளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாதா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக புதிய நீதிக் கட்சி அங்கம் வகிக்கிறது. 2014 தோ்தலில்தான் பாஜக முதன்முதலில் வேலூா் தொகுதியில் போட்டியிட்டது. மும்முனைப் போட்டி நிலவியபோதும் தாமரை சின்னத்துக்கு 3.25 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. 2019 -இல் அதிமுக - பாஜக கூட்டணியில் வேலூா் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதன் இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிட நோ்ந்தது. வேலூா் தொகுதியைப் பொருத்தவரை மக்கள் என்னை நன்கு அறிந்துள்ளனா். எனவே, சின்னம் ஒரு பிரச்னையாக இருக்காது.