ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த நான்கு வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக கேரளத்துக்கு இன்று காலை பயணம் மேற்கொண்டார்.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, இஸ்ரோவால் விண்வெளிக்கு முதல்முறையாக அனுப்பப்படும் 4 வீரர்களின் பெயர்களையும் அறிவித்தார்.
குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு பேரையும் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
இந்த நான்கு பேரில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் அஜித் கிருஷ்ணன் பிறந்தார். உதகையில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாதெமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். 2,900 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். மிக் 21, மிக் -29, ஏஎன் -32 உள்ளிட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் 26, 1976ஆம் ஆண்டு பாலக்காடு மாவட்டம் திருவழியாத் பகுதியில் பிறந்தார். தாம்பரம் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாதெமியைச் சேர்ந்த இவர், 1998ஆம் ஆண்டு விமானப் படையில் சேர்ந்தார். 3, 000 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். எஸ்யு -30எம்கேஐ, மிக் -21, மிக் -29 டோர்னேர், ஏன் -32 ஆகிய ரக விமானங்களை இயக்கியுள்ளார்.
குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்தவர். ஜூலை 17, 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். தேசிய பாதுகாப்பு அகாதெமியில் தேர்ச்சி பெற்று டிசம்பர் 2004-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். இவர் 2,000 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். எஸ்யு -30எம்கேஐ, மிக் -21, மிக் -29 டோர்னேர், ஏன் -32, ஜாகுவார், ஹாவ்க் உள்ளிட்ட ரக விமானங்களை இயக்கியுள்ளார்.
விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவைச் சேர்ந்தவர். அக்டோபர் 10, 1985ம் ஆண்டு பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாதெமியில் தேர்ச்சி பெற்று 2006-ல் விமானப் படையில் இணைந்தார். விமானத்தில் சராசரியாக 2,000 மணிநேரம் பறந்த அனுபவம் கொண்டவர். எஸ்யு -30எம்கேஐ, மிக் -21, மிக் -29 டோர்னேர், ஏன் -32, ஜாகுவார் உள்ளிட்ட ரக விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.