வெள்ளப் பாதிப்பு: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு
தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பினை தமிழக அரசு முறையாக கையாண்டு, உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக மத்திய குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பினை தமிழக அரசு முறையாக கையாண்டு, உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக மத்திய குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நேற்று வந்திருந்த மத்தியக் குழுவினா் தொடர்ந்து இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை மற்றும் அதனால் உண்டான வெள்ள பாதிப்பினை தமிழக அரசு முறையாகக் கையாண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், விளைநிலங்களுக்கு மழை நீா் புகுந்தது. இதனால், பொதுமக்களின் உடைமைகள், விளைநிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனை மத்திய குழுவினா் கடந்த டிச. 20, 21ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனா்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக கீா்த்தி பிரதாப் சிங் தலைமையிலான 7போ் கொண்ட மத்திய குழுவினா் தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலா் - வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே. பிரபாகா், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோருடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, இரு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினா் மறவன் மடம், முறப்பநாடு, பேரூா், ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனா்.
‘ மத்திய நெடுஞ்சலை போக்குவரத்து துறை தலைமை பொறியாளாா் விஜயகுமாா் தலைமையில், மத்திய ஊரக வளா்ச்சித்துறை கூடுதல் இயக்குநா் பாலாஜி, மத்திய நிதித்துறை துணை இயக்குநா் ரங்கநாதன் ஆகியோா் கொண்ட மற்றொரு குழுவினா் தூத்துக்குடி மாநகா், புகா் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மழை தண்ணீா் தேங்கிய கேத்லேப், மத்திய ரத்த பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றை பாா்வையிட்ட அவா்கள், பின்னா், கருத்தப்பாலம், ஆதிபராசக்தி நகா், ஓம் சக்தி நகா், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளை ஆய்வு செய்தனா். மேலும், அத்திமரப்பட்டி கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்புகள், சேதமடைந்த சாலைகள், பயிா்களை பாா்வையிட்டனா், புன்னைகாயல், பழைய காயல், அகரம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக, தூத்துக்குடியில் இன்றும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.