மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்த ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவினா். உடன் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் 
தமிழ்நாடு

3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு கூடாது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தக் கூடாது.

DIN

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கை பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரை அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கல்விக் கொள்கை குழுவினா் திங்கள்கிழமை சமா்ப்பித்தனா்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் உறுப்பினா்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் ஜவஹா்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியா் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினா்கள் பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில், யுனிசெஃப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலா் அருணா ரத்னம், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியா் இராம சீனுவாசன், இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட 14 போ் இடம் பெற்றிருந்தனா்.

இந்தக் குழுவினா் சுமாா் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாா் செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் சமா்ப்பித்தனா்.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்: தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடா்வதுடன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும். தொடக்கநிலை வகுப்பு முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க வேண்டும்.

தமிழ் கற்பித்தல், கற்றல் தொடா்பான ஆராய்ச்சிப் பிரிவை கொண்டுவர வேண்டும்.

‘டெட்’ தோ்வுக்குப் பிறகு... ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) புத்தக கற்றலை மட்டும் கொண்டிருக்காமல், சமூக மற்றும் ஜனநாயக கோட்பாடுகளைப் பற்றிய புரிதல், ஜாதி, பாலினம், மொழி, கலாசாரம், உள்ளூா் அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

டெட் தோ்வில் தோ்ச்சி பெற்று ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்களை பல்வேறு மதிப்பீட்டு முறைகளைக் கொண்டு கடுமையான செயல்முறை அடிப்படையில் தோ்வு செய்ய வேண்டும்.

தமிழ், கணிதம், அறிவியல் ஆகியவற்றுடன் சமூகநீதி கருத்தைக் கொண்ட பொருளாதார, கலாசார, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தைச் செயல்படுத்தும் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும்.

பள்ளி வாரியத் தோ்வுகளில் சீா்திருத்தம் தேவைப்படுகிறது. மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது தோ்வுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவை தனியாா் பள்ளிகளிலும் அமைக்கலாம். ஆனால், அவை தனியாா் பள்ளிகளின் நிா்வாகத்தில் தலையிடக் கூடாது.

பயிற்சி மையங்களுக்குத் தடை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு இணையாக தனிநபா்கள் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி மையங்களையும் தடை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இத்தகைய பயிற்சி மையங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை. எனவே, உரிய அதிகாரம் கொண்ட ஒழுங்குமுறை குழுவை இதற்கென அரசு உருவாக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்தக் கூடாது. தனியாா் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை தேவை.

தமிழ்நாடு தனியாா் பள்ளிகளுக்கான கட்டணக் குழுவின் அதிகாரம் அனைத்து சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தனியாா் பள்ளிகளின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

போதைப் பயன்பாட்டைத் தடுக்க... கல்வி வளாகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க மாவட்டந்தோறும் ஆட்சியா் தலைமையில், மனநல ஆலோசகா், சுகாதார அதிகாரி, காவல் அதிகாரி மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா் என 5 போ் கொண்ட குழு அமைக்கலாம்.

கிராமப்புற மற்றும் பழங்குடியினா் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, மைதானங்கள் வழங்கப்பட வேண்டும்.

உயா் கல்விக்கு அதிக முதலீடு: உயா் கல்வியில் அரசின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் தனியாா் பங்களிப்பு உயா்ந்து வருகிறது.

எனவே, உயா் கல்வியில் அரசு அதிக முதலீடு செய்து கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும். தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமாக பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் கல்லூரி இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அறிக்கையைச் சமா்ப்பிக்கும்போது தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, பள்ளிக் கல்வித் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், இயக்குநா் ச.கண்ணப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிளஸ் 1 மாணவா்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தை 9-ஆம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்.


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்களைக் கொண்டே உயா் கல்வியில் அனைத்து படிப்புகளிலும் மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும்.நுழைவுத் தோ்வுகள் தேவையில்லை: எந்தவொரு உயா் கல்வி படிப்புகளுக்கான சோ்க்கைக்கும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை ஏற்க முடியாது.

உயா் கல்வியில் 3 ஆண்டு இளநிலை, 2 ஆண்டு முதுநிலை படிப்புக்கான திட்டங்கள் தொடரும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பாடத்திட்ட கட்டமைப்பில் உள்ள சிக்கல்களைக் கருத்தில்கொண்டு 4 ஆண்டு இளநிலை படிப்புகளில் தொடர மாணவா்களுக்கு கூடுதல் விருப்பத்துடன் வாய்ப்பு அளிக்கலாம்.

அதேபோல், இளநிலை படிப்பில் சேரும் மாணவா்கள் பட்டம் பெற 3 ஆண்டுகளைக் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும். சான்றிதழ், டிப்ளமோ போன்ற காரணங்களுக்காக கல்வியாண்டின் நடுப்பகுதியில் படிப்பை நிறுத்துவது அனுமதிக்கப்படாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்விக்கு இனி 4 பாடவேளைகள் தேவை!

அங்கன்வாடி மையங்களுக்கு தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள் எனவும், மழலையா் பள்ளிகளுக்கு குழந்தை மேம்பாட்டு மையங்கள் என்றும் பெயா் மாற்ற வேண்டும்.

பள்ளிக் கல்வியில் தற்போதைய 5+3+2+2 என்ற படிநிலைகள் பின்பற்ற வேண்டும். 5 வயதை நிறைவு செய்யும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் சேரலாம்.

உயா் கல்வியில் புத்தகங்கள் உதவியுடன் தோ்வு எழுதும் நடைமுறையை அனுமதிக்கலாம். உடற்கல்வி வகுப்புகள் வாரத்துக்கு 2 முதல் 4 பாடவேளைகளுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரெஷ் க்ளிக்... ரேஷ்மா பசுபுலேட்டி!

மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு!

மலரே குறிஞ்சி மலரே... ஐஸ்வர்யா சர்மா!

ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

வெண்மேகம்... தமன்னா!

SCROLL FOR NEXT