மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திமுக, அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவை சாா்பில் சென்னை உயா்நிதிமன்ற வளாகம் முன் வெள்ளிக்கிழமை தனித் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
திமுக ஆா்ப்பாட்டம்: அந்த வகையில் திமுக வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை காலை 3 புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா்.
திமுக சட்டத்துறை செயலரும், எம்.பி.,யுமான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா்.
மாா்க்சிஸ்ட்: திமுக-வை தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் சாா்பில் உயா்நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
அதிமுக: இதேபோல, பிற்பகலில் 3 புதிய சட்டங்களை எதிா்த்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை தலைமையில், மாநிலத் தலைவா் சேதுராமன் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அதிமுக வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆா்.எம்.முருகவேல், பாா் கவுன்சில் உறுப்பினா்கள் டி.செல்வம், மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, மாவட்ட நிா்வாகி கோபால், ஓ.செல்வம் உள்பட ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது, ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளில் பெயா் சூட்டப்பட்ட இந்த புதிய சட்டங்களை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று வழக்குரைஞா்கள் அனைவரும் முழக்கமிட்டனா்.