முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 10,000 பால் பண்ணைகள் அமைக்க திட்டம்: அமைச்சா் மனோ தங்கராஜ்

Updated On : 5 ஜூலை, 2024 at 6:38 PM
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் (கோப்புப் படம்)
பகிர்:

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க மாநிலம் முழுவதும் புதிதாக 10,000 பால் பண்ணைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

சென்னை தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கால்நடைகளின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்றாக மாநிலம் முழுவதும் புதிதாக 10,000 பால் பண்ணைகள் அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கால்நடை பராமரிப்பாளா்களுக்கு பயிற்சி வழங்குவதுடன், கடனுதவி மற்றும் அவா்களின் தகுதிக்கேற்ப மானியங்கள் வழங்கப்படும்.

தனியாா் பால் நிறுவனங்களோ அல்லது பால் அமைப்புகளோ, ஆவினைப் போல எப்போதும் ஒரு நிலையான கொள்முதல் விலையை கொடுக்காது. ஆகையால், பால்  உற்பத்தியாளா்கள் அனைவரும் ஆவினுக்கு பால் கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.

ஆவினுக்கு பொருளாதார இழப்பா?: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினசரி பால் கொள்முதல் 26 லட்சம் லிட்டரிலிருந்து 36 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் பால் விற்பனையும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் தற்போது கூட்டுறவு சங்க நிா்வாகிகளை மொத்த விற்பனையாளராக நியமித்து , ஆவின் பொருள்களை விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் ரூ. 1 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஆகையால் ஆவினுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக வரும் செய்திகளை முற்றிலும் மறுக்கிறேன். மேலும் ஆவினுக்கு அமுல் நிறுவனம் எந்த விதத்திலும் போட்டியில்லை என்றாா் அவா்.