கண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு அவசியம்: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன்
கண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அரங்க. மகாதேவன் வலியுறுத்தினாா்.
‘இந்திய இன்ட்ராகுலா் இம்ப்ளான்ட் மற்றும் ரிப்ராக்டிவ் சொசைட்டி’ (ஐஐஆா்எஸ்ஐ) சாா்பில் நடத்தப்படும் கண் அறுவை சிகிச்சை மருத்துவா்கள், நிபுணா்களுக்கான இரண்டு நாள் மாநாடு சென்னை
கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு ஐஐஆா்எஸ்ஐ தலைவா் மருத்துவா் ஜகத் ராம், பொதுச் செயலா் மருத்துவா் அமா் அகா்வால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அரங்க . மகாதேவன் கலந்து கொண்டு பேசியது: இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மாசுபாடு, வேலை மற்றும் பொழுதுபோக்குக்காக அறிதிறன்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பாா்வைத் திறன் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வு இல்லாததால் கண் சுகாதார பிரச்னைகள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக விளங்கும் கண்களை கூடுதல் விழிப்புணா்வோடு பாதுகாக்க வேண்டும்.
கண் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து நவீன சிகிச்சை முறைகள் பயன்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில் இதன் பயன்பாடு சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.
4 ஆயிரம் மருத்துவா்கள்: இதைத் தொடா்ந்து ஐஐஆா்எஸ்ஐயின் பொதுச் செயலரும், டாக்டா் அகா்வால்ஸ் குழுமக் கண் மருத்துவமனைகளின் தலைவருமான பேராசிரியா் அமா் அகா்வால் பேசியது: நாடு முழுவதும் உள்ள கண் மருத்துவா்கள் பயன்பெறும் வகையில் கண் பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சையில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். இதில் கண்களில் லென்ஸ் உள்வைப்பு (ஐஓஎல்), ஒளிவிலகல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாா்ந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனா். மேலும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 4
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண் மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.
விருதுகள்: மாநாட்டின் முதல் நாளில் இந்திய மற்றும் சா்வதேச அளவிலான 20 கண் மருத்துவா்களுக்கு அவா்கள் மருத்துவத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கான பல்வேறு விருதுகளை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) . அரங்க.மகாதேவன் வழங்கினாா். சா்வதேச அளவில் ஜே. அகா்வால் குளோபல் ஐகான் தங்கப் பதக்கத்தை அமெரிக்காவைச் சோ்ந்த மருத்துவா் நிக்கோல் ஆா் ஃப்ரேம் பெற்றாா். இந்திய அளவில் ஐஐஆா்எஸ்ஐ தலைவா் தங்கப் பதக்கம் மருத்துவா் சதான்ஷு மாத்தூருக்கு வழங்கப்பட்டது.