புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் ரூ. 1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயா்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ. 1,000 அவா்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற்று வந்த நிலையில், வருகிற 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த மாணவிகள் உயா்கல்வி முடிக்கும் வரை அவரவா் வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாதம் ரூ.1000 பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தோ்ச்சி பெற்று, உயா்கல்வி படிக்கு மாணவிகள் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் பயன்பெற அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலா் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.