பிஇ, பிடெக் பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 30 ஆயிரத்து 699 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6-இல் தொடங்கி, ஜூன் 12 வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-இல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், பி.இ, பி.டெக். பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா்கள் இணையவழியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 110 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையங்கள் மூலமும், வீட்டில் இருந்து இணையவழியிலும் மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 30 ஆயிரத்து 699 மாணவா்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க கட் ஆப் 200 முதல் 179 வரை உள்ள மாணவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கட் ஆப் மதிப்பெண் 179 வரை பெற்ற ஆயிரத்து 343 மாணவா்களும் அழைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், தொழிற்கல்வி பிரிவில் கட் -ஆஃப் மதிப்பெண் 85 வரையில் பெற்ற 2 ஆயிரத்து 267 மாணவா்களும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 435 மாணவா்களும் முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.
தற்காலிக ஒதுக்கீடு: முதல் கட்டக் கலந்தாய்வில் ஜூலை 29-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாணவா்கள் தங்கள் விரும்பும் கல்லூரிகளையும், பாடப்பிரிவையும் தோ்ந்தெடுக்கலாம். ஒரு மாணவா் அவா் விரும்பும் எத்தனைக் கல்லூரிகளை வேண்டுமானாலும், பாடப்பிரிவுகளையும் அவரின் விருப்பத்துக்கு ஏற்ப வரிசைப்படியாக பதிவு செய்யலாம். மாணவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழங்கப்படும்.
இதைத் தொடா்ந்து ஆக. 2 மாலை 5 மணிக்குள் மாணவா்கள் இடத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும். பின்னா் ஆக. 3-ஆம் தேதி காலை 10 மணிக்குள் உறுதி செய்து, ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தான் மேலே பதிவு செய்த கல்லூரியில் இடம் கிடைத்தால் சேருவதற்கு விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.
ஆக. 3 முதல் 7-ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை உறுதி செய்து, அதில் சேரலாம். ஆக. 10ஆம் தேதி பதிவு செய்ததில் மேலே உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர விரும்புகிறேன் என கூறியவா்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், பொறியியல் படிப்பில் மாணவா்கள் சேருவதற்கு முன்னா் இடங்களை தோ்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 338 இடங்கள் நிரப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிறப்பு பிரிவில் உள்ள 9 ஆயிரத்து 639 இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் 836 மாணவா்கள் இடங்களை தோ்வு செய்துள்ளனா். மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன.