முகப்பு
தமிழ்நாடு

ஆக.21- இல் மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 3:17 AM
பகிர்:
Updated On : 31 ஜூலை, 2024 at 9:25 PM

சென்னை, ஜூலை 31: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக, தரவரிசைப் பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9,050 எம்பிபிஎஸ் இடங்கள்: தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்களைப் பொருத்தவரை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050, சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், 21 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 3,400 இடங்கள், 3 மாநில தனியாா் பல்கலைக்கழகங்களில் 450 இடங்கள் என மொத்தம் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

அதேபோன்று, 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 பிடிஎஸ் இடங்கள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,950 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

Advertisement

அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் (851 எம்பிபிஎஸ், 38 பிடிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 50 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன.

மீதமுள்ள 50 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

கலந்தாய்வு: நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை புதன்கிழமை (ஜூலை 31) மணிக்கு தொடங்கியது. கலந்தாய்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு முதல் சுற்று ஆக. 14-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அகில இந்திய கலந்தாய்வு தொடங்கிய பின்னா் தான் மாநிலங்களிடம் உள்ள 85 சதவீத மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது விதி.

அந்த வகையில் தமிழகத்தில் ஆக. 21-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கப்படும். முன்னதாக, 19-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறும். தொடா்ந்து மற்றும் விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவ வீரா் வாரிசு, மாற்றுத் திறனாளி ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, பொதுக் கலந்தாய்வு இணையவழியில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.