தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களில் 863 போ் வைப்புத் தொகையை இழந்ததாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. பிரதான எதிா்க்கட்சியான அதிமுக ஏழு இடங்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழந்தனா்.
உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளா் போட்டியிட்ட நாமக்கல் உள்பட 22 தொகுதிகளில் திமுகவும், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோன்று, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி தன் வசமாக்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழந்துள்ளனா்.
ஒரு தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அவா்களது வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இதில் குறிப்பாக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 34 வேட்பாளா்களில் 7 போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். தென் சென்னை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூா், கன்னியாகுமரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா். 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 11 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்தது.
அந்தக் கட்சி வட சென்னை, சிதம்பரம், கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், தஞ்சாவூா், திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விருதுநகா் ஆகிய தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போடியிட்ட பாமக, திண்டுக்கல், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்துள்ளன.
தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளில் மத்திய சென்னை மற்றும் திருவள்ளூா் தொகுதியில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. நாம் தமிழா்கட்சி போட்டியிட்ட 39 தொகுதிகளிலும், தமாகா போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூா், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்தன.